Friday, September 21, 2012

நாவலம்-நன்னன்





"மாந்தா மாந்தா" என விளித்தாவாறே நன்னன் விரைந்து முற்றத்துள் நுழைந்து கொண்டிருந்தான்.

நன்னனைப் பார்த்ததும் மாந்தனுக்கு மிக மகிழ்ச்சி. தோழன் அல்லவா, அகமும் முகமும் மலர " வா நன்னா,வா" என வரவேற்றான் மாந்தன்.

கதை நிகழும் காலம் இன்றைக்கு எட்டாயிரம் ஆண்டுக்கு முன்னால் என்பதை நினைவூட்ட.தென் மதுரையில் இருவரும் ஒரே தெருவில் ஒன்றாய் வளர்ந்தவர்கள்..தேரையரிடம் தமிழ் எழுத்துக்களை, இலக்கண, இலக்கியங்களை ஒன்றாய் பயின்றவர்கள்.

மணற்துகள்களில் மின்னும் பொன் துகள்களை அரித்துக் கொண்டோடும் பல்துளியாற்றில் ஓன்றாய் நீச்சல் பழகியவர்கள்..

சொற்போரும் மற்போரும் ஒன்றாய்ப் பழகியவர்கள். தேரையரிடம் அடிப்படைக் கல்வி பயின்றபின் கீழ்க்குணகரை நாட்டிலுள்ள கபாடபுரத்தில் உயர்கல்வி பயில வந்திருந்தனர்.

இருவருக்கும் தனி வழிகாட்டியாய் காக்கைப் பாடினியார் நியமிக்கப்பட்டிருந்தார்.

பொன்னை புடம் போடுவதுபோல் அறம், பொருள்,இன்பம்,அறிவியல் என அனைத்து கலைகளிலும் ஏற்படும் ஐயங்களை தீர்த்து வைக்கும் வழிகாட்டியாய் பாடினியார் இருந்தார்.

கவாடபுரம், பொருநை ஆறு குணக் கடலில் கலக்கும் கழிமுகத்தில் அமைந்த நகரம். பெயருக்கேற்றாப் போலவே பல தெருக்கள் கவைகள் போலகூடும் வண்ணமாகவும் தமிழர் நாட்டின் கடல் வழியாய் நுழையும் கவாடம்(கதவு) போலவும் அமையப்பெற்ற நகரம்.

தென் மதுரை நகர் மிகப் பொலிவுடன் இருக்க இந்த நகரானது புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. கல்விச்சாலைகள், ஆய்வு அவைகள், வானூர்தி ஆய்வு மையங்கள், கடற்கல ஆய்வு மையங்கள் எனப் புதிது புதிதாய் அமைக்கப்பட்டு வருகின்றன.

கவாடபுரம் என்ற பெயரை அகத்தியர் தேர்ந்தெடுத்தாய் செவி வழிச் செய்தி உண்டு.மக்கள் தொகைப் பெருக்கம் கட்டுபாட்டிற்குள்ளேயே இருந்தபோதிலும் அளவிலும்,பயனிலும் சற்றும் குறையாத கவாடபுரம் ஏன் அமைக்கப்படுகிறது என்பது மாந்தனுக்கும் நன்னனுக்கும் விளங்காப் புதிராகவே இருந்தது.

தென்மதுரையுடன் ஒப்பிட்டு ஒரு ஆய்வறிக்கை வழங்குமாறு பாடினியார் இட்ட பணியை வேறு மாந்தன் செய்ய வேண்டும்.

மாந்தன் மனக்குதிரை ஓடிக் களைத்தது..

"என்ன சிந்தனை மாந்தா" என்ற நன்னன் குரலின் இனிமையில் களைப்பு நீங்க "இன்று புதிதாய் உணர்வொலிகள் கேட்டேன்" என்றான் மாந்தன்..

"பாடினியார் சொன்னார்கள், உனக்கு கிடைத்திருக்கும் அக ஒலிக் குறிப்புகளை ஆய்வு செய்ய வேண்டுமாம் விரைவாய் உடனே அழைத்து வரச் சொன்னார்கள் வா, போகலாம்" என்று விரைவு படுத்தினான் நன்னன்.

வாயிலில் கண்ட பொறியைப் பார்த்ததும் "இது என்ன? தேரும் இல்லை,கலமும் இல்லை பறவைகளின் அமைப்பைப் பெற்றுள்ளதே" என்றான் மாந்தன். இதுதான் "வானூர்தி இன்னும் இதன் வடிவமைப்பும் நுணுக்கங்களும் முற்றுப் பெறவில்லை. இது இயங்காப் பொறிதான் ,வரும்போது இதையும் பாடினியார் கொண்டு வரச் சொன்னார்கள். வா போகலாம்"..

நன்னனும் மாந்தனும் கையளவான வானூர்திப் பொறியை எடுத்துக் கொண்டு விரைந்தார்கள் தவள மாடத்தை நோக்கி...

Thursday, September 20, 2012

நாவலம் -- குண்டில் இயக்கம் பாடத்திட்டம்



குண்டில் இயக்கம் பாடத்திட்டம்



"புசுண்டரை சந்தித்தே ஆக வேண்டும்" சித்தத்தை நிலைபெறச் செய்ய முயலும் செம்மாந்தன் நெஞ்சுச் சக்கரம் அதிர ஆரம்பித்தது


குண்டில் என்ற முதுகுத் தண்டில் இயங்கும் இயக்க சக்தியை அறிந்த் ஆயும் செம்மாந்தன்.

குண்டி என்ற அடிப்பகுதியை முறையாக அமர்த்தி, உள்ளே நிலைபெற்றுள்ள இயக்கத்தினை கிளர்த்தி குண்டில் என்ற முதுகுத் தண்டில் செலுத்தி இயக்கும் புதிய ஆய்வு முறை இது.. மத்தி உரைக்கும் அவையில் ஆதி சித்தனால் அறிமுகப்படுத்தப்பட்டு பாடத்திட்டமாய் நிலைபெறும் முன் சோதனை செய்யப்படும் புதிய முறை இது..

செம்மாந்தன் நெஞ்சுக் சக்கரம் அதிர்ந்தது.. இது புது அனுபவம் . இவ்வொலி காதில் கேட்கவில்லை. நேரே நெஞ்சின் ஒலியாய் கேட்டது....

வெப்பம் என்பது ஆற்றலின் ஒரு வகையாய் உணரப்பட்டிருந்தது . வெப்பம் உருவாக்கும் அமைப்பாய் குண்டி என்ற அமரும் இடத்தை வைத்து முதலாம் நிலையையும் தொப்பூழ் கொடி நிலையையும் மாந்தன் கடந்திருந்தான். தான் முறையாய்ச் செய்ய ஆசனாய் காக்கைப் பாடினியார் செய்ய பணித்திருந்தவற்றை முறையாகச் செய்திருந்தான். இரண்டு வருடங்களில் இந்நிலையை அடைந்திருந்தான். அவனது அக உணர்வுநிலைகளைக் குறித்து வைத்திருந்தான்.

இன்று முதன் முறையாய் மூன்றாம் நிலையை அடைந்திருந்தான்.

"அணுவைப் பிளந்தேழ் கடலைப் புகுத்து..."

குண்டில் இயக்கும் அதிர ஆரம்பித்தது. "புசுண்டரை சந்தித்தே ஆக வேண்டும்"

மாந்தனுக்கு தெளிவானது மூல ஒலியின் அதிர்வானது "அணுவைப் பிள..." என்றதிர விளைவொலியானது "புசுண்டரைச் சந்தி" என்றது

இருஅக ஒலிகளும் ஒன்றை ஒன்று விஞ்சும் மூயற்சியில் மன ஒருமை குலைய குண்டில் இயக்கம் கிளர்தல் அடியை அடைந்தது.

குருதி ஓட்டம் தடைப்பட்டதால் மாந்தனால் உடனே எழ இயலவில்லை.

காக்கைப் பாடினியாரை உடனே சந்திக்க வேண்டும்.. மனதின் விரைவுக்கு உடல் ஈடு கொடுக்க வில்லை .அப்படியே அமர்ந்திருந்தான்.. குண்டிலியக்கத்தின் மேலோட்டமான பயிற்சிகளே தனக்கு தரப்படுவதை உணர்ந்திருந்தான். இம்முறைகள் இன்னமும் மத்துரை தமிழ் அவை(தமிழ்ச்சங்கத்தில்) ஒப்பு அளிக்கப் பெறாத்தினால் ஆசிரியை எளிய முறைகளையே பயிற்சி அளித்திருந்தார்..

அணுவைப் பிளத்தல் என்ற சொற்றொடர் இதுவரைக் கேள்விப்படாத ஒன்று. புசுண்டர் என்பதும் கேள்விப்படாத ஒன்று.

ஏதோஒரு சுழலில் தான் கருவியாவதை மனம் அறிய மாந்தன் எழுந்தான்..

-----------------------------------------------------

மத்தி உரை-- தயிரை மத்தால் கடைவது போல் ஆய்ந்து பல சான்றுகளுடன் கற்றதை உரைக்கும் ஆய்வுரை.. இது பிற்காலத்தில் மத்துரை என்று மாறி மதுரை எனத் திரிந்தது. இவ்வுரை நிகழும் இடம் மூதறிஞர்களால் நடத்தப் பெற்று அவை எனவும் பின்னாளில் சங்கம் (சங்கின் ஒலி போன்று தெளிவாய் அறிஞர் முழங்கும் இடம்) எனப் பெயர் பெற்றது..


நாவலம்


எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எனக்குள் என் மொழியைக் குறித்த பெருமை இருந்து வருகிறது. நாளுக்கு நாள் அது வலுத்து வருகிறது.எம் நிகழ்காலச் சிறுமை என்னை அச்சுறுத்துகிறது. எம் பெருமை பழம் பெரும் பெருமை. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடிப் பெருமை அது. நாவலந்தேயத்தே தென் மதுரையிலும், கபாடபுரத்திலும் பல்துளியாற்றங்கரையிலும் பொருநை ஆற்றங்கரையிலும் உலவிய என் கனவுகளுக்கு வரி வடிவ ம் கொடுக்க வேண்டும் என்பது என் தமிழ் அன்னைக்கு நான் செய்யும் பணி. வரலாற்று ஆதாரங்களால் அல்லாது செம்மொழியின் ஆதாரங்களால் என் கற்பனையை ஓட்டும் முயற்சி இது. பிழைகள் இருக்கலாம் ஆனால் என் தமிழ்க் குடிப் பெருமையை,என் மொழிக் காதலை,எனது நிகழ்கால வலிவின்மையின் அங்கலாய்ப்பை நான் பதிவு செய்தே ஆகவேண்டும்.. எங்கும் நிறைகின்ற எல்லாம் வல்ல இறையைப் பணிந்து கற்றவர் அடிதொழுது பரிகிறேன்.... நாவலம்.......