Wednesday, June 30, 2021

வீடு


நமக்கே நமக்கென 
நல்ல வீடு 
ஆடல் பாடலாய்
கட்டிக்கொள்ள வேண்டும்
எனறிருக்கிறாள்

எனக்கும் ஆசையாய்த்தான்
இருக்கிறது

தலையைக் 
குனிந்து கொள்கிறேன்
இன்னுமொரு கடன்
தலையில் விழுவது
போலிருக்கிறது

கைபேசி மணி
ஒலிக்கிறது
வங்கியிலிருந்துதான்
கடன் வாங்கலியோ கடன்!
கூவித்தான் விற்கிறார்கள்





பாவம் நிலக்கடலை

யாருமில்லாத
திண்ணைப்பாட்டிக்கு
நிலக்கடலை தந்தால்
கதை சொல்லுவாள்.

பாவம் செய்தவர்கள்
நிலக்கடலைகள் ஆக
சபிக்கப்படுவார்கள் என
திண்ணைப்பாட்டி கதை 
சொல்லி இருக்கிறாள்

மூச்சுத் திணற
மண்ணில் புதைக்கவும்
நீராவியில்
வேக வைக்கவும்
தோலை உரித்து
எரிய எரிய
மிளகாய்தூவி
எண்ணையில் வறுத்தும்
சுடுமணலில் புரட்டியும்
செக்கில் ஆட்டியும்
தண்டனை தருவார்கள்
என கதை
சொல்லுவாள்.

திண்ணைப்பாட்டியின் 
கொடுமைக்கார புருஷன்
கடலைக் காட்டில்
காணமல் போனதாக ஒரு
கதையும் இருக்கிறது.





கால் வெளியின் துமி

கால வெளியின் 
துமி நான்
நீள அகல உயர
நிற பரிமாணங்கள்
புறத்து இருத்தி
திடும் திடும்
என காற்றை
சூடேற்றி
சுழிமுனையில்
சுடர் மதி தீ
தாண்டி
துரிய
துரியாதீத
பெருவெளி 
விரிய
பெருவெளி 
கரைந்த 
பேரமைதி
துமி அடங்கிய
மையத்தில்
யாவுமாய்
நின்ற‌பொருளாகி
விடும் விடும்
எனக் குறுகி
என்னுள் நான்
நீள அகல உயர
நிறப் பரிமாணங்களாய்
புறம் நகர்ந்தேன்






Sunday, June 27, 2021

சிகப்பு பால்கோவா

சிகப்பு பால்கோவா.


1980 களின் ஆரம்ப வருடங்கள். இரண்டாவதோ அல்லது மூன்றாவதோ படித்துக் கொண்டிருந்தேன்.
நிச்சயமாக 4 ஆவது இல்லை. மேட்டுப்பாளையம் மகாசன துவக்கப்பள்ளியில் கேட்டை ஒட்டிய தடுப்பு வகுப்பறைதான். 1,2 மற்றும் 3 ஆம் வகுப்புகளை  மூங்கில் தட்டிகளால் தடுத்திருப்பார்கள்.
4 வது ம் 5 வதும் தனியாக ப வடிவ அமைப்பாய் கடப்பா கற்கள் பதியப்பட்ட வகுப்பறைகளாய் அழகாக இருக்கும். 
கட்டெறும்புகள் நிறைந்த பலா மரமும் ஒரு பெரிய மாமரமும் இருக்கும். ப வடிவத்தினை நீட்டியவாறு மேடையும் கொடிக்கம்பமும் இருக்கும். வடக்கு மூலை வகுப்பறை விசேஷமானது.‌பெரிய ஓவியங்களாய் காந்தி இராட்டை சுற்றிக் கொண்டிருப்பார். பகத்சிங்,நேரு என பல ஓவியங்கள் இருக்கும். அந்த வகுப்பறையில் ஒரு நாளாவது உட்கார்ந்து விட வேண்டும் என்பதே எனக்கும்  என் நண்பன் அல்லாப்பிச்சைக்கும் ஆசை.
1 ,2, 3 வகுப்புகளை எடுப்பது பஷீர் வாத்தியாரும் தனலஷ்மி டீச்சருந்தான்.
தனலஷ்மி டீச்சர் கொஞ்ச மாதங்களாய்த்தான் வந்திருக்கிறார். 
எனது நண்பர்களில் அல்லாப்பிச்சை,சாதிக் பாட்சா,செந்தில்,சின்ன ரவி, பெரிய ரவி ,ஹேமா, பிரேமலதா,மெஹருண்ணிசா இவர்களை எனக்கு நினைவிருக்கிறது.
தேவிகா புதிதாய் எங்கள் வகுப்புக்கு வந்திருந்தாள். நாங்கள் பஷீர் வாத்தியார் கிளாஸ். தனலட்சுமி டீச்சர் பொண்ணுடா இது . அவங்க அப்பா ஜஸ் ஸ்கூல் வாத்தியார் தெரியுமா என்றான் லட்டு என்கிற லட்சுமி நாராயணன்.  
முத்து,மோகன் இருவரும் பங்களாமேட்டிலிருந்து வருபவர்கள். அவர்கள் டிரவுசர்களில் ஒரு ஓட்டை கூட இருந்ததில்லை.
கம்யூனிஸ்ட் ராதாகிருஷ்ணன் சண்முகம், எஸ் சண்முகமும் , சரவணன் கூட என் வகுப்புதான். 
தனலட்சுமி டீச்சர் வகுப்பில் ஆசாத்,ஆஷிப் என அகர இகர வரிசைப் பெயர்க்காரர்கள் இருந்தார்கள்.  அல்லாப்பிச்சை மட்டும் ஏனோ தெரியவில்லை பஷீர் வாத்தியார் கிளாஸில் எங்களுடன் இருந்தான்.
அ, ஆ, இ  1,2, 3 என  உரக்க கத்தியபடியே படித்துக் கொண்டிருந்தோம். பஷீர் வாத்தியார் ஏகாந்தமாய் குறட்டை விட்டு தூங்கி விடுவார். பல்லு தூக்கலான கரெஸ்பாண்டண்ட் அடிக்கடி வந்து செக் செய்வார். 
அதிகாரத்தின் மீதான பயம் அவர் மூலமாகவே எனக்கு அறிமுகம் ஆனது. அவர் கோபப்படும்போதெல்லாம் அவர்  பற்கள் நீளமாகி விடுவதாகவே எனக்கு தோன்றியது.
ஐஸ் ஸ்கூல் என்பது பெரிய பள்ளிக்கூடம் அங்கு ஜஸ் குச்சி மரங்கள் நீள நீளமாய் நட்டிருக்கிறார்கள் என்று நாங்கள் நிச்சயமாக நம்பினோம். லட்டு ஒருமுறை அந்த மரத்தின் பூவை கொண்டு வந்து எல்லோரிடமும் பெருமையடித்துக் கொண்டிருந்தான். எப்படிக் கிடைத்தது என்று யாரிடமும் சொல்லவில்லை. அவன் ஐஸ்கூலுக்குள் போய்க் கொண்டு வந்திருக்கமுடியாது என பேசிக்கொண்டோம்.
பூவை விட விதையைக் கொண்டுவந்தால் நமது பள்ளிக்கூடத்திலும் நட்டு ஜஸ் ஸ்கூலாக மாற்றி விடலாம் என எனக்குத் தோன்றியது. எல்லோருக்கும். இந்த யோசனை பிடித்துப் போனது.
யார் கொண்டு வருவது ? பெரிய விவாதத்திற்கும் பிறகு நான், லட்டு,முத்து மற்றும் சாதிக் செல்லுவது என முடிவாயிற்று.
தேவிகாவிற்கு தெரிந்தால் அவங்க அம்மா,அப்பா மூலமாக ஜஸ் ஸ்கூலுக்கு தெரிந்துவிடும் என்பதால் தேவிகாவிற்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு முறுக்கு ஹேமலதாவிடம் விடப்பட்டது.
10 ஐஸ் குச்சி கொடுத்தால் பிளைன் கலர் ஜஸ் ஒன்று நிச்சயம். ராஜா ஜஸ் பேக்டரிக்கு பக்கத்தில்தான் என் வீடு என அல்லா பிச்சை  நம்பிக்கை கொடுத்தான். ராயல் ஜஸ் பேக்டரில யாரையாவது கேட்க சொல்லி பெயர் குலுக்கிப் போட்டதில் சின்ன ரவி  பெயர் வந்தது. செந்தில் என்கூட வரணும் என்ற அவன் கோரிக்கை ஏற்கப்பட்டது.
முத்து இதில் சேர்ந்தது மோகனுக்கு பிடிக்கவில்லை. மோகனின் பக்கத்து தெருவில்தான் தேவிகா இருப்பதாய் முத்து சொன்னான்.
திட்டத்தில் நம்பிக்கையும் பயமும் ஒன்றாக வந்தது...
இந்த திட்டம் நாஞ்சொன்ன யோசனையிலிருத்து உருவாச்சு.இந்த மரத்தைப்பத்தி ஐ ஸ்கூல் அண்ணனுகளுக்கும் அக்காக்களுக்கு நிச்சயமாய் தெரியும். நாம் இரகசியமா யாருகிட்டயாவது விசாரிக்கணும்னு முடிவு பண்ணிக்கிட்டேன்.
எங்க பெரியப்பா மகன் (செல்வராஜ்) செல்வாண்ணன் 7 வது, 8 வது படித்துக் கொண்டு இருந்த வருடம் அது. மகாஜன ஐ ஸ்கூல். துவக்கப் பள்ளியை ஒட்டியே இருக்கும். பெரிய இரும்பு கேட் போட்டிருப்பார்கள். 9 வதுக்கு மேலே எல்லாம் பேண்ட் போட்டிருப்பார்கள்.
மேட்டுப்பாளையம் ஊட்டி இரயில் பாதையை ஒட்டித்தான் ஐ ஸ்கூல். முக்கால்வாசி நீளத்திற்குப் பிறகு நீலகிரி கூட்டுறவு காய்கறி நிலையம் (NCMS) இருந்துச்சு. பள்ளிக் கூடம் கொஞ்ச தூரத்ததுக்கு ட மாதிரி உள் வாங்கி இருக்கும். இருப்பு பாதையை ஒட்டி பள்ளி மைதானம் இருக்கும்.அதன் தொடர்ச்சியாக என்சிஎம்எஸ் இருக்கும். என்சிஎம்எஸ் மறைவில் ஐ ஸ்கூல் வகுப்பறைகள் இருக்கும். என்சிஎம்எஸ் க்கும் பள்ளிக்கும் நடுவில் நீளமா சந்து இருக்கும். அங்கு மரங்கள் இருந்தன. ஆனால் அவை கண்ணுக்கு தெரியாது.
ஐ ஸ்கூல் காம்பவுண்ட் சுவர் அப்போ பெரிய உயரமாய் தெரியும். ஜஸ்கூலுக்கு வெளியே எனசிஎம்எஸ்க்கு உள்வாங்கித்தான் துவக்கப் பள்ளி இருந்துச்சு. ஐ ஸ்கூல் மாணவர்கள் துவக்க பள்ளி வழியாகத்தான் அவர்கள் கேட்டை சென்றடைவார்கள். 
பல்லு தூக்கலான கோபக்கார கரெஸ்பாண்டெண்ட் சின்னப் பையன் களை ஐ ஸ்கூல் கேட்டை தாண்டக்கூடாது என்று மிரட்டி வைத்திருந்தார்
தண்டவாளத்தில் நடந்துட்டேதான் சிலேட்டில் வீட்டுப்பாடம் எழுதிட்டே போவோம்.
தண்டவாளத்தில் இருந்து பார்த்தால் பல மரங்கள் தெரியும். ஆனால் ஐஸ் குச்சி மரம் தெரியவே இல்லை. ஒருத்தன் முதுகில் ஒருத்தன் ஏறியும் தோள் மீது குதிரை ஏறிப் பார்த்தும் தெரியவில்லை.
மெதுவாக எங்க அண்ணங்கிட்ட ஜஸ் குச்சி மரத்தைப் பற்றி விசாரிச்சேன்.
எங்க அண்ணன் மறுத்து எல்லாம் சொல்லுல, ஒரு மரம் அந்த மறைவான இடத்துலே இருக்கறதா சொன்னாரு.
முத்து, லட்டு,நான்,சாதிக் எல்லாம் கூடிப் பேசிகிட்டோம். மரம் இருக்கிறது உறுதியாச்சு, இடம் கூட குத்து மதிப்பாய் தெரிஞ்சாச்சு. உள்ளே போவேண்டியதுதான், ஜஸ் குச்சி மர விதையை தூக்கிட்டு வந்து எங்க ஸ்கூலையும் ஐ ஸ்கூலா மாத்த வேண்டியதுதான்.
அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்தோம்.
உற்று நோக்குதல் என்பது எங்களுக்கு இயல்பாய் அமையப் பெற்றது. அந்த பெரிய கேட்டை விட்டு  வேறு வழிகளில் உள்ளே நுழைய முடியுமா என யோசிக்க ஆரம்பித்தோம்.
ஆஷிப்பின் தாத்தா என்சிஎம்எஸ்க்கு முன்னாடி பெட்டிக் கடை வைத்திருந்தார். பள்ளிக்கு செல்லும் வழியில்தான் இருந்தது. முனியப்பன் கோயில் அந்தக் கடையை ஒட்டி இருந்தது. இரண்டுக்கும் நடுவில் பெரிய தேங்காய்ப் பூ மரம் இருந்தது. அந்த மரத்தின் இலைகள் புளிய இலைகள் போலவே இருக்கும். சிகப்பு பூக்களில் லேசான வெள்ளை நிறங்கள் திட்டுத்திட்டாய் இருக்கும். பூவின் இந்தப் பகுதிதான் தேங்காய்ப் பூவாக கருதப்பட்டது. 
நாங்கள் சாப்பிட்டதோடு எங்கள் வகுப்பு  பொண்ணுகளுக்கும் சேர்த்தே எடுத்துச் செல்வோம்.
அந்த மரத்தடியில் தான் ஆஷிப்பின் தாத்தா வாடகை சைக்கிள் கடை வைத்திருந்தார். இந்த கடையில் பெரியவர்களுக்கான சைக்கிள்கள் இருக்கவில்லை. எங்களுக்கான சைக்கிள்கள் சிறிதும் பெரிதுமாய் ஏழு அல்லது எட்டு இருக்கும்.
கால் அவர் பத்து பைசா, அரை அவர் 20   காசு, நாலணா(25 காசு) முழுதாய் கொடுத்தால் ஒரு அவர் கூட வாடகைக்கு தருவார்.
அப்போது குர்பானி சைக்கிள்கள் என்று புதிய வகை சைக்கிள்கள் 2 அறிமுகமாகி இருந்தது. வெள்ளி நிறத்தில் பளபளப்பாக மின்னும். வெயிலில் சென்றால் அதன் ஒளி ரோட்டில் எல்லோர் கண்களையும் கூசச் செய்வதாய் எங்களுக்கு தோணும்.
லைலா ஓ லைலா என்று பாடிக்கொண்டே இந்த சைக்கிள் விட்டிருக்கிறோம்.
இந்திப் படங்களை பற்றி எல்லாம் அறிந்திருக்கவில்லை ஆனால் இந்தப் பாடலை முணுமுணுத்திருக்கிறோம்.
இந்த சைக்கிள்கள் வாடகை அதிகம். நாலணாவுக்கே அரை அவர்தான் கிடைக்கும். 
ஆஷிப் தாத்தா செத்துப் போனால் இந்த சைக்கிள்கள் எல்லாம் ஆஷிப்புக்குதான் கிடைக்கும் என்று பரவலாக பேசிக் கொண்டோம். இல்லைடா அது அவங்க. அப்பா,சித்தப்பா, பெரியப்பா வுக்கு தான் போகும். அவர்கள் ஆஷிப்புக்கு ஒரு சைக்கிளை வேண்டுமானால் தருவார்கள் என்றும் பேசிக் கொள்வோம். அவன் தாத்தா செத்துப் போகும் பட்சத்தில் குர்பானி சைக்கிள் அவனுக்கே கிடைக்க வேண்டும் என்று முனியப்ப சாமியிடம் வேண்டிக் கொண்டிருக்கிறோம்.
அல்லாப்பிச்சைக்கும், சாதிக் பாட்சாவுக்கும் இதில் சந்தேகம். நீங்கள் எல்லாம் முனியப்பனிடம் வேண்டிக் கொண்டால் அல்லாவுக்கு அது எப்படித் தெரியும். யார் போய் அவரிடம் சொல்லுவார்கள்,அவர்களே நேரடியாய் சின்ன பள்ளிவாசலில் அல்லாஹ்விடம் சொன்னால் நன்றாக இருக்கும் என நாங்கள் பேசிக்கொண்டோம்.
சாதிக் பாட்சா வீட்டில் தமிழ் அல்லாது உருது பேசுவார்கள். அவன் குர்பானி சைக்கிளை பற்றி அல்லாவிடம் முறை வைப்பதாய் ஒரு மாலை உறுதி அளித்தான்.
அதன் பிறகு 2 , 3 நாட்களுக்கு என்னிடம் அவன் பேசவே இல்லை. அவன் மிகுந்த கவலையாக இருப்பதாகவும் குர்பானியில் ஏதோ சிக்கல் ,மர்மம் இருப்பதாகவும் எனக்குத் தோன்றியது.
ஒரு நாள் அவனே சொன்னான்.குர்பானி ல்லாம் ரொம்ப கஷ்டம்டா. எங்கப்பா சொன்னாரு எங்க மதத்தில ரொம்ப காலத்துக்கு முன்னாடி பெரியவரு ஒருத்தரு அவர் பையனை அல்லாவுக்கு பலி கொடுத்தாரு. அதிலிருந்துதான் நாங்க ஆடு, மாடு ஒட்டகம் எல்லாம் பலி கொடுக்கிறோம். ஓ குர்பானினா பலி கொடுக்கறதா. பத்திராத்தா கோயில்ல   கடா வெட்டற மாதிரிதான் . பரவால்ல விடுடா ஆஷிப்புக்கு சைக்கிள் கிடைக்க நாம் வேண்டிக்க வேண்டாம் என்று பேசிக் கொண்டோம். சாதிக் சந்தோஷமாய் ஆகிவிட்டதாய் எனக்குத் தோன்றியது.
குர்பானி சைக்கிள் பலி வாங்கும் சைக்கிள் என நாங்கள் பேசிக்கொண்டதில் அந்த சைக்கிள்கள் வாடகைக்கு போவது குறைந்தது போனது வேறு ஒரு கதை. பின்னொரு நாளில் ஆஷிப்பும் நானும் கட்டிப் புரண்டு சண்டையிட்டதும் அது கத்தியால் என் முதுகில் கீறுவது வரை போனதும் வேறு ஒரு கதை.
என்சிஎம்எஸ்  காய்கறி ஏலச்சந்தை அதில் ஊட்டி, கோத்தகிரியிலிருந்து வந்த கிழங்கு,கேரட்,முட்டைக்கோஸ்,பீட்ரூட் , முள்ளங்கி முதலான காய்கறிகள் விவசாயிகள் சார்பில் ஏலம் விடப்பட்டு
கமிஷன் மண்டிகளாலும் மொத்த வியாபாரிகளாலும் தென்னிந்தியா முழுவதும் அனுப்பப்பட்டு வந்தது.
அதற்கு சாக்குப்பைகள் மிக அவசியம். சாக்குப்பைகள் தைக்கும் தொழிலைத் தான் எங்க அப்பா செய்துட்டு இருந்தார்.
நெசவு பூர்விகத் தொழிலாக இருந்தாலும் பருத்தி நூலையும் பட்டு நூலையும் விட்டு விட்டு சணல் நூலையும் கையில் எடுத்திருந்தார்கள்.
பெரிய வருமானம் தரும் தொழில் அல்ல இருந்தாலும் காய்கறி வரத்து அதிகமாக இருந்ததினால் நான் 6 , 7 வது படிக்கும் வரை போதுமானதாகவே இருந்தது.  ஆனால் பள்ளிக்கூடம் செல்லும் போதெல்லாம் காசு தரமாட்டார்கள்.ஊரிலிருந்து யாராவது வந்தால் நாலணா எட்டணா கிடைப்பதோடு சரி.
என்சிஎம்எஸ்ஸின் சுவர்கள் உயரமாக இருந்தன. எனவே என்சிஎம்எஸ் வழியாக உள்ளே செல்வது முடியாது என முடிவு செய்தோம். முனியப்பன் கோயில் மேடை கட்டி என்சிஎம்எஸ் ஒட்டி ,துவக்கப்பள்ளி,ஐ ஸ்கூல் இடையே அமைந்திருந்தது. ஒரு உபயோகத்தில் இல்லாத மின்கம்பமும் இருந்தது. அந்த சுவரை தாண்டினால் போதும் ஐ ஸ்கூலுக்குள் நுழைந்து விட முடியும் . நேராக ஜஸ் குச்சி மரம் உள்ள ட வடிவ இடத்திற்கு கூட்டிப் போய்விடும் என்று திட்டமிட்டோம்.
முனியப்பன் சாமி முன்னால் இருக்கும் மண்ணை நெற்றியில் வைத்துக் கொண்டால் கரெஸ்பாண்டென்ட் கோவத்திலிருந்தும் பஷீர் வாத்தியார் அடியிலிருந்தும் நாங்கள் தப்பித்துக் கொள்ளுவாள் எங்கள் டிரவுசர் பாக்கெட்டுகளில் எப்போதும் முனியப்பசாமி மண் இருக்கும். 
பள்ளிவாசலில் இது மாதிரி ஏதாவது இருக்கா என்று அல்லாபிச்சையிடம் கேட்டதற்கு கோபித்துக் கொண்டான்.
பள்ளிவாசலில் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லடா என்று நாங்கள் பேசிக்கொண்டோம்.
அடுத்த நாளே அல்லா பிச்சை  கருப்பு கயிற்றில் ஒரு தாயத்து கட்டிக் கொண்டு வந்தான். மந்திரித்து கட்டியது மண்ணை விட சக்தி நிறைந்ததாய் சொல்லிக் கொண்டான்.
அல்லாவும் முனியப்ப சாமியும் சமமான சக்தி படைத்தவர்கள் என்று சொல்லிக்கொண்டோம்.
இரண்டு நாள் லீவில் சாதிக் பாட்சாவும் தாயத்து கட்டிக் கொள்ள வேண்டும்,மற்ற நாங்கள் எல்லாம் முனியப்ப சாமி மண்ணையும் புல்லையும் பாதுகாப்பிற்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்தோம்.
அந்த திங்கள்கிழமை சுவர் ஏறிக் குதிக்க திட்டம் போட்டுக் கொண்டோம்.

திங்கட்கிழமை திட்டமிட்டபடி தாயத்து,முனியப்ப மண் , புல் இவற்றோடு நேரமாகவே கம்பத்தை பிடித்து சுவர் ஏறி விட ஒன்றாக கூடிவிட்டோம்.படபடப்பும் உற்சாகமும் பயமும் முதல் சாகச உணர்வை உச்சமாகவே வைத்திருந்தது.


சாதிக் பாட்சா சுவற்றில் முதலில் ஏறி விட்டான். டே உயரம்டா. அந்தப்பக்கம் குதிக்க முடியாது. குதிச்சாலும் திரும்ப ஏற முடியாதுடா என குண்டைத் தூக்கிப் போட்டான். நாங்களும் சுவர் ஏறிப் பார்த்தோம். உண்மையாகக் தான் தெரிந்தது. 

புஸ்ஸாப் போச்சா,புஸ்ஸாப் போச்சா என எங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டோம். 

ஜஸ் குச்சி மரத்திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என நினைத்துக் கொண்டோம்.

திரும்ப வரும் வழியை யோசிக்காமல் போனோமே , நல்ல வேளை குதிக்கல ,சாதிக் பாட்சா புத்திசாலிதான்டா என்று பாராட்டிக் கொண்டோம்.

வகுப்புக்கு போய் அமைதியாய் உட்கார்ந்திருந்தோம்.எப்பவும் பள்ளி ஆரம்பிக்கும் நேரம் நெருங்க நெருங்க ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். ஜஸ் குச்சி மர விதையை பார்க்க ஆவலாக இருந்தார்கள். எங்கள் திட்டம் தோத்தாங்கோழி ஆகிவிட்டதில் எல்லோருக்கும் வருத்தம்தான்.

ஜ ஸ்கூலுக்கு லேட்டாக வந்தால் கேட் பூட்டி விடுவார்கள். அவர்களை திருப்பி அனுப்பி விடுவார்கள் ஆனாலும் அவர்கள் எப்படியாவது ஸ்கூலுக்குள் சென்றுவிடுவார்கள். வேறு ஏதோ வழி இருக்குடா,கண்டு பிடிக்குறம்டா என்று கையின் மீது கை வைத்து சத்தியம் செய்து கொண்டோம்.

இரண்டு மூன்று நாளில் அந்த சாகச வழியையும் கண்டுபிடித்துவிட்டோம். ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி தில்லி முள் செடிகளுக்கூடாக போனால் மண் திட்டு ஒன்று அதன் மேல் நான்கைந்து கருங்கல்கள் இருந்தது. சுவரில் ஏறுவதற்கு வசதியாய் காரையை கற்களால் அகற்றி பள்ளம் பள்ளமாய் அமைத்திருந்தார்.

டே என்னடா பண்றீங்க,உங்க ஸ்கூலுக்கு இதுல போக முடியாதுடா என்று சொல்லிக் கொண்டே ஒரு பெரியண்ணன் லாகவமாக கால் வைத்து ஏறி அந்தப்பக்கமாக இறங்கினார். அவர் கூட வந்த இன்னொரு அண்ணனிடம் "அண்ணா இதே மாதிரி அந்தப் பக்கமிருந்து திரும்பி வந்தரற முடியுமா னா" என்று கேட்டு வைத்தோம். 

அவரு இதல்லாம் சாதாரணம் என்று மேலே ஏறி அந்தப் பக்கமாய் குதித்து பிறகு மீண்டும் மேலே ஏறி இந்தப் பக்கமாய் இறங்கிக் காட்டினார்.

ரஜினி ஸ்டைல் லாம் பண்றீங்கனா, என்று அவரை ஹீரோவாக்கினோம்.
அண்ணா, எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கனா, தாய் மீது சத்தியம் ரஜினி மாதிரி நாங்களும் இவரிடமிருந்து கற்றுக் கொள்ள கேட்டுக்கிட்டோம். சரி டா, இப்ப டைம் ஆய்டுச்சு, நாளைக்கு வாங்க சொல்லித் தர்றேன் என்று ஏறி குதித்து மாயமாக போனார்.

சந்தோஷம்னா சந்தோஷம் அத்தனை சந்தோஷம். அடுத்த நாளுக்காக எவ்வளவோ நேரம் காத்திருந்த மாதிரி இருந்துச்சு..

அடுத்த நாள்...
அடுத்த நாள் சாதிக்கும் நானும் தண்டவாளத்தின் ஓரமாக காத்திருந்தோம். அந்தண்ணன் வந்த பிறகு முதல்ல கல்லுமேல ஏறு.சுவரில் தோண்டியிருந்த அந்த பள்ளத்துல கால் வை. மேலே இருக்கும் பள்ளத்தில் கை வை. இப்படியே மாற்றி மாற்றி ஏறு என சொல்லிக் கொடுத்ததை செய்து பார்த்தோம்.
ஹைய்யா,சுவர் ஏறிப் பழகிக் கொண்டோம். அண்ணா நன்றினா என்று குரு வணக்கம் செய்து கொண்டோம்.

மற்றவர்க்காக காத்திருக்கவில்லை. பள்ளி ஆரம்பிக்க இன்னும் நேரம் இருக்கிறது.சாதிக்கும் நானும் ஏறி இறங்கி விட்டோம்.ஐஸ்கூல் மண்ணை மிதித்து விட்டோம். பெருமைப்பட்டுகொண்டோம் ,பயமாகவும் இருந்தது. 

ஒவ்வொரு மரமாக பார்த்துக் கொண்டே வந்தோம்.

அட இது புங்க மரம், தைல மரம்,சூட்டுக் கொட்டை மரம்,தென்னை மரம் வேறு எந்த மரமும் பள்ளி மைதானத்தின் ஓரங்களில் இல்லை. கிடைத்த விதைகளை எல்லாம் பொறுக்கி கால்சட்டைப் பைகளில் போட்டுக்கொண்டோம். சூட்டுக் கொட்டைகள் 2 , 3 மட்டுமே கிடைத்தது.

சூட்டுக் கொட்டைகள் என்று எனக்கும் சாதிக்கும் அப்போது தெரியாது.

ஐஸ் குச்சி மரம் மட்டும் எங்கேயும் தென்படவில்லை. பள்ளியின் பின்புற செந்திலும் எந்த மரமும் தென்படவில்லை. ஒதுக்குப்புறமாய் உயரமாய் ஒரே ஒரு மரம் மட்டும் இருந்தது. அதிலும் ஐஸ்குச்சிகள் எதுவும் இல்லை. கீழே விழுந்திருந்த வெள்ளைப் பூக்கள் லட்டு கொண்டுவந்த அதே வெள்ளைப் பூக்கள் தான். குழல் போல வெண்ணிறமாய் நீண்டு அதன் நுனியில் இதழ்கள் இருக்கும் அமைப்பு. மேலே இருந்து கீழே விழும்போது சுழன்று கொண்டே விழும் அமைப்பில் இருந்தது. எவ்வளவு தேடியும் விதைகள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு பாதாம் மரத்தையும் கண்டுபிடித்தோம். 4 பாதாம் கொட்டைகளையும் பொறுக்கிகள் கொண்டோம்.

ஜஸ்குச்சி விதைகள் கிடைக்கவில்லை என்றாலும் வெறும் கையுடன் இல்லை.நிறைய வேறு விதைகளை பொறுக்கிகள் கொண்ட மகிழ்ச்சி.
முன்புறம் கேட்டை பியூன் திறந்துகொண்டிருந்தார். மாணவர்கள் ஒவ்வொருவராய் வர ஆரம்பித்திருந்தார்கள். சுவர் ஏறி சுற்றிக்கொண்டு போவதை விட ஒரே ஓட்டமாய் கேட்டு வழியா ஓடிடலாம்டா என்றான் சாதிக். சரிடா,1, 2,3 ஜூட்...ஒரே ஓட்டமாய் ஓடி திறந்திருந்த கேட்டைத் தாண்டி துவக்கப்பள்ளி (எலிமண்ட ஸ்கூல்) எல்லைக்குள் வந்திருந்தோம். எங்கள் பள்ளியை என்னவோ எலிமண்ட ஸ்கூல் என்றே நினைத்திருந்தது வேறு ஒரு கதை.

லட்டு வரும் முத்துவும் தான் முதலில் வந்தார்கள்.முழுக்கதையையும் சொன்னோம்.பாக்கெட்டுகளை காலி செய்து எல்லா விதைகளையும் கொட்டினோம்.ஐஸ்குச்சி மர விலையைத் தவிர. 

அந்தப் பூ மரம்தான் ஐஸ் குச்சி மரம் எனவும் அதை மரமில்லில் கொடுத்துதான் ஐஸ் குச்சிகள் உருவாக்குவார்கள் என முத்தும் 12 ஆண்டுக்கு ஒரே ஒரு முறைதான் ஒரே விதை தரும் என மாயாஜாலக் கதையை லட்டு வரும் சொன்னார்கள்.

சூட்டுக் கொட்டையை நிலத்தில் வேகமாக தேய்த்து பக்கத்திலிருப்பவர் தொடைகளில் வைத்தால் சுடும் .ஜாலியாக விளையாடலாம் என்று லட்டு சொல்லவே மெதுவாக தேய்த்து வைத்துப் பார்த்துக் கொண்டோம். சூடு போட்டது போலத்தான் இருந்தது...

நாங்கள் போட்ட திட்டம் வெற்றி பெற்றதாகவே நினைத்துக் கொண்டோம். சாதிக்கிடம் 10 காசும் முத்துவிடம 10 காசும் இருந்து. இன்டர்வெல்லில் பால்கோவா வாங்கிச் சாப்பிட திட்டமிட்டு கொண்டோம். என்னிடமோ, அல்லாப்பிச்சையிடமோ லட்டிடமோ காசு இருந்ததில்லை.


இன்டர்வெல்லில் 15 நிமிடம் கேட்டைத் தாண்டி போகலாம். கேட்டு வாசலிலே விதவிதமாய் கடை போட்டிருப்பார்கள்.

வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு,சர்க்கரைவள்ளிக்கிழங்கு, தாளித்துக் கொட்டிய மரவள்ளிக்கிழங்கு,கலாக்காய்,சூரிப்பழம்,இலந்தைப்பழம்,இலந்தை வடை,விக்கிப்பழம்,இலந்தைப்பொடி,குறுக்காக நறுக்கி உப்பு மிளகாய்த்தூள் தடவிய ஆரஞ்சுப் பழம், மாங்காய் பத்தை,மக்காச்சோளம்,சிறு நெல்லிக்காய்,மலை நெல்லிக்காய்,நெல்லிக்கா ஊறுகாய்,கலாக்காய் ஊறுகாய்,நாவல் பழம்,ஐவிரலிக்காய் இது போக ஜவ்வு மிட்டாய்,ஜம்பர் மிட்டாய்,சோன் பாப்டி,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ்,பால் ஐஸ்,சேமியா ஐஸ்,பஞ்சாமிர்த ஐஸ்,ஜவ்வரிசி ஐஸ்,முக்கோணமாய் பிஸ்தா ஐஸ்,மூணு கலர் ஐஸ் இப்படி விதவிதமாய் களைகட்டும் கடைகளில் வாங்கித் தின்பதற்கு ஐந்து காசு முதல் நாலணா வரை தேவைப்படும்.

இது போக செட்டியார் கடை ஒன்று இருக்கும். தேங்கா பர்பி,கடலை பர்பி,கம்பர் கட்,எள்ளு மிட்டாய்,சிவிங்கம்,மாத்திரை மிட்டாய்,சூட மிட்டாய்,தைல மிட்டாய்,பீடா மிட்டாய்,ஆர்லெக் மிட்டாய்,ஆரஞ்சு மிட்டாய்,நியூட்ரின் மிட்டாய்கள், தவிட்டு பிஸ்கட் என வகை வகையாய் இருக்கும். அவரிடம் இரண்டு வகையான பால்கோவாக்கள் இருந்தது. கனசதுரமாய் வெள்ளை நிறத்திலும் சிகப்பு நிறத்திலுமாய் ஐந்து காசுக்கு ஒன்று எனக் கிடைக்கும்.

வெள்ளைப் பால்கோவா வை விட சிகப்பு பால்கோவா தான் எனக்குப் பிடிக்கும். இதற்கு முன்பு குன்னூரிலிருந்து பெரியம்மா வந்தபோது தந்த காசில் இரண்டையும் வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன்.

வெள்ளைப் பால்கோவா மாவு மாவாய் இருக்கும் சிகப்பு பால்கோவா வில் எசன்ஸ் வாசனையோடு இனிப்பு கொஞ்சம் தூக்கலாக இருக்கும். சிகப்பு என்பதை விட மட்டி ஆரஞ்சு கலர் என்பதே பொருத்தம் ஆனாலும் சிகப்பு பால்கோவா என்றே பெயர் வைத்திருந்தோம்.கனசதுரமான அந்த இனிப்பு உலகத்தை விரல்களில் தூக்கி வாயினருகில் கொண்டு செல்லும்போதே வாசனை தூக்கும்.

பாதி பால்கோவா வை பால் பற்களில் கடித்து நாக்கை மேலாக அழுத்தி கரைய விட்டு இனிப்புச் சுவை பரவும்போது கண்களை மூடி இரசித்திருப்போம்.

இன்டர்வெல் விட்டதும் கதை சொல்லிக் கொண்டிருந்ததால் கொஞ்சம் தாமதமாகவே நான், முத்து,சாதிக்,லட்டு,அல்லாபிச்சை என ஐந்து பேரும் செட்டியார் கடையின் முன் ஓட்டமாய் ஓடி நின்றோம்.

நாலு பேரும் வெள்ளைப் பால்கோவா வேண்டும் என்றார்கள் ,நான் மட்டும் சிகப்பு பால்கோவா என்றேன். செட்டியார் கையில் 20 காசுகளை கொடுத்தோம்.முதலில் 4 வெள்ளைப் பால்கோவாக்களை எடுத்துக் கொடுத்துவிட்டார். கூட்டம் அதிகமாக இருக்கவே சிகப்பு பால்கோவா வை தாமதமாகவே எடுத்துக் கொடுத்தார். அதற்குள் பள்ளிக்கூட மணி அடித்து விடவே சிட்டாய்ப் பறந்திருந்தார்கள் மற்ற நால்வரும்.

செட்டியார் காசு கொடு என கையை நீட்டினார்.20 காசு மட்டுமே கொடுத்ததும் இன்னும் 5 காசு தரவேண்டியதும் பயமுறுத்தியது. சந்தர்ப்பங்களும் பயமும் தான் மனிதனுக்கு பொய்யை அறிமுகம் செய்கிறது. அதான் முதல்லயே காலணா கொடுத்தமே என்று சொன்னேன்.கூட்டத்தில் அவருக்கு ஞாபகம் இருக்கவில்லை. சரி சரி என்று சொல்லிவிடவே விட்டேன் ஓட்டம்.

மனசாட்சி விழித்துக் கொண்டது அன்றுதான்.அன்றுமுதல் முதலாக பிளவுபட்டுப் போனேன். எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டேன் செய்தது சரியா என்று. சரியான பதிலை எனக்கு நான் சொல்லிக்கொள்ள முடியவில்லை.

பிறகு சிகப்பு பால்கோவா பிடிக்காமலே போனது.






Wednesday, June 23, 2021

மயிலே மயிலே

மயிலே மயிலே

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படுவார்.

https://youtu.be/qTuzBvAPYa4

நண்பர் அலெக்ஸ் "கடவுள் அமைத்த மேடை " என்ற படத்திலிருந்து மயிலே மயிலே உன் தோகை எங்கே? என்ற வாலிப வாலியின் பாடலுக்கு இசை வள்ளுவன் இளையராஜாவின் இசையை சுட்டி பொருள் விளக்கி ,குரலில் குழைந்த பாலுவையும் நெகிழாத ஜென்சியையும் பாராட்டி இருக்கும் காணொளியை கண்டேன், 
இன்பம் கொண்டேன்.

தயாரிப்பாளரையும் இயக்குநர் முத்துராமனையும் வாரியிருப்பார். கம்ப ராமாயண சிவக்குமாரை வம்புக்கு இழுத்திருப்பார்.

காட்சியமைப்பை லேசாக விளக்கிவிட்டு விலகி இருப்பார். இணைய வழிக் கலவி கற்கும் காலம் இது.மன்னிக்கவும் கலவினா சொன்னேன் கல்வி,கல்வி.

திரைப்படம் வந்த எழுபதுகளின் கடைசி வருடங்களில் காதலை,காமத்தை,அன்பை திரைப்படங்களே சொல்லிக் கொடுத்தன.

காமத்தில்தான் புலன்கள் உச்சம் அடைகின்றன. நோக்கலும்,வாய்மொழிதலும்,தொடுதலும்,நுகர்தலும்,சுவைத்தலும்,மீட்டலில் இசைச் சந்தம் கேட்டலும்,அமுதம் சிந்தியதில் விளைந்த மின்பாய்ந்த ஏகாந்தமும் காமத்தின் கூறுகள்.

இலை மறை காயாக விளக்கியது இலக்கியம்.கனியாக காட்சிப்படுத்தியது திரைப்படங்களே.

இப்பாடலின் காட்சியமைப்பை பார்த்தால் தெரியும் இயக்குநரின் உத்தி.

நேர்த்தியான இசை,காமம் இழையும் பாடல் வரிகள்,பாடல் ஆரம்பித்து விட்டால் இசையின் போக்குக்கு தகுந்தாற்போலதான் காட்சி அமைக்க முடியும். காட்சியை அமைக்கணும் என்றால் இசையின் ஆரம்பத்திலேயே அமைக்க வேண்டிய சூழல். 

புல்லாங்குழல் கேட்கும் அந்த முதல் பத்து பதினைந்து வினாடிகளிலேயே பாடல் வரிகள் ஆரம்பிக்கும் முன்னமேயே 
வாலிப சிவக்குமாரும் 
வாளிப்பான சுமித்ராவும்
வாலியின் வரிகளுக்கு
இசையின் இளமைக்கு
முன்னூட்டமாய் சில்மிஷங்கள்
செய்யும் காட்சியாய் அமைந்திருக்கும்.

அவன் கண் நோக்கும் 
அதை கண்ட அவள்
இரு கண் போக்கும்
மேலாடை தழுவும்
ஒரு கைப் போக்கும்
நீ வா என்று
உதடு குவிக்கும்
அவன் கண் அழைப்பும்
இல்லை என்னை வெட்கம்
பிடுங்கித் தின்கிறதே
ஆசைதான் எனக்கும்
நீயே வந்துவிடேன்
என்ற கண்சம்மதமும்
நிழல்களின் நகர்த்தும்
காதல் குருவிகளின்
 அலகிணைதலும்
இதழ்தான் சேர்ந்ததோ
என் அவள் விலகி ஒடுவதாய்
காட்சி அமைப்பு இருக்கும்.

பாடலின் கருத்தை விட்டு விலகி இருப்பதால் பாடல் வரிகள் ஆரம்பிக்கும் முன்னேயே 
மின்னல் போல் தோன்றி மறைந்திருக்கும் இந்தக் காட்சி அமைப்பு.

மயிலே மயிலேனு பாட்டு ஆரம்பிக்கும்போது இரண்டு மயிலை காண்பித்திருப்பார் இயக்குநர்.

கல் மயில் முதலில் தெரியும்
வெண் மயில் (நாயகி) இரண்டாவது தெரிவார்.

ஒயிலே ஒயிலே என்ற வரிகளில்
நாயகி ஒயிலாக நடந்து காட்டுவார்.
ஊஞ்சல் இங்கே என்ற வரிகளில் ,நான்தான் உன் ஊஞ்சல் என்று அபிநயம் பிடித்திருப்பான் நாயகன்.

குளிர்காலம் அல்லவோ தனிமையில் விடலாமோ இயல்பாய் நடந்து கொண்டே கேள்வி கேட்டவாறே தளிருடல் தொடலாமோ என்று முடிக்கையில் இயல்பாய் நாயகித் தோளைத் தொட மறு கையினால் விலக்கி ஓடுகிறாள் நாயகி.

மயிலே மயிலே என பின் தொடர்கிறான் நாயகன்.

பாடல் வரிகள் ஆரம்பித்த பிறகு இதுவரை ஒத்து போகிறது காட்சியமைப்பு.

நாயகி பாட ஆரம்பிக்கிறாள்
சேர்வது போல் நாயகனைச் சேர்ந்து விலகிப் போகிறாள்

இசை மட்டுமே வரும் இடை வெளியில் நாயகன் நாயகி மையப்படுத்தி காண்பிக்கிறார் இயக்குநர். டண்டான்டண்டான் என்று இசைத் துண்டுமுடியும்போது நாயகியின் நடையழகை காட்டியிருப்பார் முத்துராமன்.

வயலின் இசைமுறுக்கேற்றும் போது பக்கவாட்டிலிருந்து நாயகியின் கண்களை மூடி கழுத்தில் முத்தமிடுவான் நாயகன்.



துள்ளி விலகி ஆசையாகப் பார்த்து தன் இரு கண்களையும் மூடிக் கொண்டே பின்னோக்கி நடந்து கொண்டே என்ன பண்ணிட்ட?இன்னும் இன்னும் என்று உணர்வு தெரியும் வண்ணம் உணர்வு காட்டி இருப்பாள் நாயகி.

இசைத் துண்டுகளில் எல்லாம் பாடல் வரிகள் இல்லாதிருக்கும்.காட்சியமைப்பு கருத்தை விலகி நிற்கும். 


தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க என்ற வரிகளில் இயக்குநர் இளமையாய் யோசித்திருப்பார். கவர்ச்சியான காட்சியமைப்பாக இருக்கும் .‌அந்தக் கால் இளைஞர்களுக்கு கண்களுக்கு விருந்தாய் அமைத்திருப்பார். விரசம் இருக்காது சரசம் இருக்கும்.

இரசித்துக் கொண்டே இருக்கலாம்.
இசையும் அதனுடன் இசையும்
இளமையும் இன்பம் இன்பம்.
மலரினும் மெல்லிது காமம்.
அதைச் சொல்லும் தமிழோ இன்பமோ இன்பம்.




 







Tuesday, June 22, 2021

முகமூடிகள்



நல்லவன்
கெட்டவன்
பொய்யன்
மெய்யன்
டம்பக்காரன்
வீரன்
பயந்தாங்கொள்ளி
பொண்டாட்டி தாசன்
அம்மாபிள்ளை
ஊமைக்குசும்பு
வாய்த்துடுக்கு
அமைதியோ அமைதி
கோபக்காரன்
இன்னும்
எத்தனை எத்தனை?

இவையாவும்
முகமூடிகள்!
நீங்கள் ஒவ்வொருவரும்
தந்த வேறுவேறான
முகமூடிகள்.

அத்தனையும்
கழற்றி
வீசியிருக்கிறேன்
கடந்த வாரத்திலிருந்து.

அடுத்த மூச்சுக்கே
ஆக்ஸிஜன் மூடி
பிறகென்ன
முகமூடி?


நீங்கள் மகிழ்ச்சியடையவோ
துக்கமடையவோ, நட்பாகவோ,பகையாகவே
போட்ட முகமூடிகள்
அற்ற முகத்துடன் நான்
இருக்கிறேன்.


நீங்கள் என்னை
மறுமுறை 
பார்க்க 
நேர்ந்தால் 
உங்களுக்கான
முகமூடியற்ற
என்னை
பார்த்து
பயந்துவிடாதீர்கள்.

இம்முகமூடிகளை 
மீண்டும்
அணிய
அவகாசம்
தேவையாயிருக்கிறது.
அணியாமலிருந்தால்
நான் நானாகவே
இருந்து விட்டுப் போவேன்.