"மாந்தா மாந்தா" என விளித்தாவாறே நன்னன் விரைந்து முற்றத்துள் நுழைந்து கொண்டிருந்தான்.
நன்னனைப் பார்த்ததும் மாந்தனுக்கு மிக மகிழ்ச்சி. தோழன் அல்லவா, அகமும் முகமும் மலர " வா நன்னா,வா" என வரவேற்றான் மாந்தன்.
கதை நிகழும் காலம் இன்றைக்கு எட்டாயிரம் ஆண்டுக்கு முன்னால் என்பதை நினைவூட்ட.தென் மதுரையில் இருவரும் ஒரே தெருவில் ஒன்றாய் வளர்ந்தவர்கள்..தேரையரிடம் தமிழ் எழுத்துக்களை, இலக்கண, இலக்கியங்களை ஒன்றாய் பயின்றவர்கள்.
மணற்துகள்களில் மின்னும் பொன் துகள்களை அரித்துக் கொண்டோடும் பல்துளியாற்றில் ஓன்றாய் நீச்சல் பழகியவர்கள்..
சொற்போரும் மற்போரும் ஒன்றாய்ப் பழகியவர்கள். தேரையரிடம் அடிப்படைக் கல்வி பயின்றபின் கீழ்க்குணகரை நாட்டிலுள்ள கபாடபுரத்தில் உயர்கல்வி பயில வந்திருந்தனர்.
இருவருக்கும் தனி வழிகாட்டியாய் காக்கைப் பாடினியார் நியமிக்கப்பட்டிருந்தார்.
பொன்னை புடம் போடுவதுபோல் அறம், பொருள்,இன்பம்,அறிவியல் என அனைத்து கலைகளிலும் ஏற்படும் ஐயங்களை தீர்த்து வைக்கும் வழிகாட்டியாய் பாடினியார் இருந்தார்.
கவாடபுரம், பொருநை ஆறு குணக் கடலில் கலக்கும் கழிமுகத்தில் அமைந்த நகரம். பெயருக்கேற்றாப் போலவே பல தெருக்கள் கவைகள் போலகூடும் வண்ணமாகவும் தமிழர் நாட்டின் கடல் வழியாய் நுழையும் கவாடம்(கதவு) போலவும் அமையப்பெற்ற நகரம்.
தென் மதுரை நகர் மிகப் பொலிவுடன் இருக்க இந்த நகரானது புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. கல்விச்சாலைகள், ஆய்வு அவைகள், வானூர்தி ஆய்வு மையங்கள், கடற்கல ஆய்வு மையங்கள் எனப் புதிது புதிதாய் அமைக்கப்பட்டு வருகின்றன.
கவாடபுரம் என்ற பெயரை அகத்தியர் தேர்ந்தெடுத்தாய் செவி வழிச் செய்தி உண்டு.மக்கள் தொகைப் பெருக்கம் கட்டுபாட்டிற்குள்ளேயே இருந்தபோதிலும் அளவிலும்,பயனிலும் சற்றும் குறையாத கவாடபுரம் ஏன் அமைக்கப்படுகிறது என்பது மாந்தனுக்கும் நன்னனுக்கும் விளங்காப் புதிராகவே இருந்தது.
தென்மதுரையுடன் ஒப்பிட்டு ஒரு ஆய்வறிக்கை வழங்குமாறு பாடினியார் இட்ட பணியை வேறு மாந்தன் செய்ய வேண்டும்.
மாந்தன் மனக்குதிரை ஓடிக் களைத்தது..
"என்ன சிந்தனை மாந்தா" என்ற நன்னன் குரலின் இனிமையில் களைப்பு நீங்க "இன்று புதிதாய் உணர்வொலிகள் கேட்டேன்" என்றான் மாந்தன்..
"பாடினியார் சொன்னார்கள், உனக்கு கிடைத்திருக்கும் அக ஒலிக் குறிப்புகளை ஆய்வு செய்ய வேண்டுமாம் விரைவாய் உடனே அழைத்து வரச் சொன்னார்கள் வா, போகலாம்" என்று விரைவு படுத்தினான் நன்னன்.
வாயிலில் கண்ட பொறியைப் பார்த்ததும் "இது என்ன? தேரும் இல்லை,கலமும் இல்லை பறவைகளின் அமைப்பைப் பெற்றுள்ளதே" என்றான் மாந்தன். இதுதான் "வானூர்தி இன்னும் இதன் வடிவமைப்பும் நுணுக்கங்களும் முற்றுப் பெறவில்லை. இது இயங்காப் பொறிதான் ,வரும்போது இதையும் பாடினியார் கொண்டு வரச் சொன்னார்கள். வா போகலாம்"..
நன்னனும் மாந்தனும் கையளவான வானூர்திப் பொறியை எடுத்துக் கொண்டு விரைந்தார்கள் தவள மாடத்தை நோக்கி...

சிறந்த சொல்லாக்கம், மொழி ஆளுமை, நடை மற்றும் வனப்பு எம்மை ஈர்க்கும் விசை என்றால் மிகையன்று. வான்தொடு கோவில் மாடவொளி மித்த ஒரு உத்தம பயண முயற்சியாக, பயணம் கண்டு கொண்டு திரும்பிய பண்டிதரின் வாய்மொழி கேட்டு வியந்து, அத்தொடர் பயண முயற்சியின்பாற் ஈர்க்கப்பட்டு தம்மையும் இணைக்கவே முற்படும் பதசாரியாக, மேன்மலும் சீர்க்க முற்பட சிந்தை உந்தும் ஊக்குவிக்கியாக உங்கள் படைப்பு எம்முள் தாக்கம் கொண்டுள்ளது. தொடர்ந்து வாசிப்போம், கவனிப்போம் கருத்து பரிமாற்றம் நிகழ முயற்சிப்போம் வாழ்த்துகள்.
ReplyDelete